இந்தியா

உ.பி கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டிட கூரை இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம்

செய்திப்பிரிவு

கன்னோஜ்: உத்தப் பிரதேச மாநிலத்தின் கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வந்த கட்டிடம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மாநில பேரிடர் மீட்பு படைக் குழு உட்பட காவல் துறை மற்றும் மீட்பு குழுவினர், சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மேலும் தகவல் அறிந்து கொள்வதற்காக மூத்த அதிகாரிகளுடன் அங்கு சென்று மாவட்ட ஆட்சியர் சுப்ராந்த் குமார் சுக்லா ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், "முதல்கட்டத் தகவலின்படி, கட்டுமானப் பணி நடந்து வந்த கட்டிட கூரையின் ஷட்டர் இடிந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதே எங்களின் முதல் நோக்கம். கைவசமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மீட்பு பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்துக்கு சென்று நிவாரண பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே மாநில அமைச்சர் அசிம் அருண் கூறுகையில், "இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்துள்ள மூன்று பேர் லக்னோ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

SCROLL FOR NEXT