வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 27 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடுவாழ் இந்திய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி 18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 3 நாட்கள் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் 27 இந்திய வம்சாவளியினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு விருதுகளை வழங்கினார்.
அமெரிக்காவில் வசிக்கும் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி ரவி குமார், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு தொழில்களை நடத்தும் ராமகிருஷ்ணன் சிவசுவாமி அய்யர், மலேசியாவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அதற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்மண்ணை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்தந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாச்சாரத்தை பரப்ப வேண்டும்.
உலகம் ஒரு குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. உலகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.
அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், புவனேஸ்வர் நேற்றைய மாநாட்டில் பேசும்போது, “கடந்த 3 நாட்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவுக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆண்டாண்டு காலம் நீடித்திருக்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் சாதனைகளால் பெருமிதம் கொள்கிறேன். குறிப்பாக இந்திய பெண்களின் சாதனைகள் நாட்டை தலைநிமிர செய்கிறது" என்று தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மாநாட்டின் ஒரு பகுதியாக ஹார்வர்டு மற்றும் எம்ஐடி பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசினேன். அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கேட்டறிந்தேன்" என்று தெரிவித்தார்.