கடும் குளிரால் உறைந்து பனிக்கட்டியான ஏரியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் குறித்த வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உறைந்த ஏரி மீது நடந்து சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் பனிக்கட்டி உடைந்து சிக்கிக் கொள்வதும், கடும் போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்படுவதும் பதிவாகியுள்ளது.
அதில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்பதாவது: அருணாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள செலா கணவாய் பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எனது எச்சரிக்கை. அங்குள்ள உறைந்த ஏரிகள் மீது செல்வோர் கவனமாக இருக்கவேண்டும். அனுபவம் வாய்ந்த நபர்களுடன் அந்த உறைந்த ஏரிகள் மீது கவனத்துடன் நடந்து செல்லுங்கள். அதேபோல் பனிக்கட்டி நிறைந்த சாலைகள் வழியாகச் செல்லும்போது கவனத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள்.
இங்கு கடும் குளிர் நிலவுகிறது. எனவே, குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்து சீதோஷ்ண நிலையை கொண்டாடுங்கள். அதே நேரத்தில் உங்களது பாதுகாப்பும் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிர்ச்சி தரும் இந்த வீடியோவைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் கூறும்போது, “உறைந்த ஏரிப்பகுதிக்குச் செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் சாகசம் செய்ய நினைக்கின்றனர். அப்பகுதியில் சவால் விடும்வகையில் போட்டி போட்டுக் கொண்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு நாங்கள் சென்ற பனி படர்ந்த பகுதியில் சில பயணிகள் இதுபோன்று சிக்கிக் கொண்டனர்" என்றார்.
அருணாச்சல் பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏரிகள், பனிக்காலத்தில் இவ்வாறு உறைந்து விடுவதும், அதில் சுற்றுலாப் பயணிகள் சென்று சிக்கி கொள்வதும் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.