மத்திய வெளி​யுறவு செய்தித் தொடர்​பாளர் ரந்தீர் ஜெய்ஸ்​வால். (அடுத்த படம்) ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல். 
இந்தியா

ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி இரவு பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள், பெண்கள் என 46 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலால் ஏழு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. ஆப்கன் படைகள் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் துணை ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களின் கேள்விக்கு மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது குறிவைத்து தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன் கடும் கண்டனத்துக்குரியது. சொந்த தவறுகளை மறைக்க அண்டை நாடுகள் மீது பழிபோடுவது பாகிஸ்தானின் பழைய நடைமுறை. இந்த விவகாரத்தில் ஆப்கன் செய்தித் தொடர்பாளரின் பதிலையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தை பிரிக்கும் எல்லையில் கனரக ஆயுதங்களை கொண்டு இரு நாடுகளுக்கும் சண்டையிட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT