இந்தியா

ம.பி.யில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 2 பேருக்கு பொருத்தம்

செய்திப்பிரிவு

மூளைச்சாவு அடைந்த இந்தூர் நபரின் உடல் உறுப்புகள் சிறப்பு விமானத்தில் மும்பை கொண்டு செல்லப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டன. அவரது இரண்டு சிறுநீரகங்களும் உள்ளூர் நபர்கள் இருவருக்கு பொருத்தப்பட்டன.

மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த வியாபாரி சுரேந்திர பார்வல்(28). ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சமீபத்தில் அவருக்கு குடல் வால் பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 23-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார். இவருக்கு தனது உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்பது கடைசி ஆசை. இவரது விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றினர்.

அவரது இரு கைகள் மற்றும் ஈரல் ஆகியவை சிறப்பு விமானம் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டன. அந்த கைகள், மின்சாரம் தாக்கி கைகள் செயல் இழந்த நபர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரது ஈரல் மும்பையில் மற்றொரு மருத்துவமனையில் இருந்த நபருக்கு பொருத்தப்பட்டது. சுரேந்திர பார்வலின் சிறுநீரகம் இரண்டும் இந்தூரைச் சேர்ந்த இருவருக்கு பொருத்தப்பட்டது. அவரின் தோல் மற்றும் கண்களும் தானம் செய்யப்பட்டுள்ளன.

உடல் உறுப்புகளை முடிந்த அளவு தானம் செய்த சுரேந்திர பார்வலின் உடல் இந்தூர் மருத்துவமனையில் சிவப்பு கம்பள மரியாதையுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சுரேந்திர பார்வலின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT