அசாமின் காசார் மாவட்டத்தின் 4 கிராமங்களில் குழந்தை திருமணம் ஒழிக்கப்பட்டிருப்பதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் சிறப்பு நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் 2-ம் கட்ட நடவடிக்கையை அசாம் அரசு தொடங்கியது. அப்போது 915 பேர் கைது செய்யப்பட்டனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது 3-ம் கட்டமாக குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை கடந்த 21-ம் தேதி அசாம் அரசு தொடங்கியது. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அண்மையில் கூறும்போது, “வரும் 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணம் முழுமையாக ஒழிக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அசாம் முதல்வர் நேற்று சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அசாம் உட்பட இந்தியா முழுவதும் குழந்தை திருமணம் மிகப்பெரிய பிரச்சினையாக நீடித்து வருகிறது. குழந்தை திருமணத்தால் இளம்பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அவர்கள் இழக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண "பெண் குழந்தையை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைக்கு கல்வி கொடுங்கள்" என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அசாம் அரசு சார்பில் குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சிறப்பு திட்டங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பலனாக அசாமின் காசார் மாவட்டத்தில் ருக்னி, பைரப்பூர், ரோஸ்கண்டி 1, ரோஸ்கண்டி 2 ஆகிய நான்கு கிராமங்களில் குழந்தை திருமணம் முழுமையாக ஒழிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அசாம் முன்மாதிரியாக செயல்படுகிறது. இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.