இந்தியா

இந்தியா மீதான நம்பிக்கை உலக அளவில் அதிகரிப்பு: பாரதிய ஜனதா தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. அவர்களுக்கு நமது நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசியக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசியதாவது:

நாட்டில் வன் முறைச் செயல்கள் நடைபெறு வதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை மிகவும் முக்கியம். இதில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.

தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்களால் தங்களின் வாக்கு வங்கி அரசியலை கைவிட முடியவில்லை. சமூக கட்ட மைப்பை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர்.

தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் சமூக மற்றும் தேசிய ஒற்றுமைக்கு பாஜக தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாடு முன்னேற்றம் அடைந்தால், அதன் 125 கோடி மக்களும் முன்னேற்றம் அடைவார்கள்.

கடந்த 60 ஆண்டு கால ஆட்சியின்போது எதையுமே செய்யாதவர்கள், கடந்த 60 நாட்களில் நாங்கள் (பாஜக கூட்டணி அரசு) என்ன செய்தோம் என்று கேட்கிறார்கள். பாஜக கூட்டணி அரசின் செயல்திறனை மிகவும் கடினமான, வேறு வகை யான அளவுகோலுடன் மதிப்பிடு கின்றனர். ஏன் இப்படி செய் கின்றனர் என தெரியவில்லை. காலம்தான் இதற்கு விடையளிக் கும். ஆனால், இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சோதனையில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

பாஜகவுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் தங்களின் தீர்ப்பை கூறிவிட்டனர். மக்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

கடந்த 60 நாட்களுக்கும் மேலான பாஜக ஆட்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாற்றத்தைக் கொண்டு வருவதில் நாங்கள் வெற்றி பெறுவோம். நம் மீது நமக்கு நம்பிக்கை வரவேண்டும். தேர்தலுக்கு முன்பு எனக்கு டெல்லி அரசியலைப் பற்றியோ, நாடாளுமன்றத்தைப் பற்றியோ சிறிதளவுதான் தெரியும். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு, பலவற்றை அறிந்து கொண்டேன். மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. அவர்களுக்கு நமது நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குஜராத்துக்கு வெளியே மோடியை பற்றி யாருக்கு தெரியும் என்று பேசியவர்களுக்கு மக்கள் தக்க பதிலை அளித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டையும் எரிசக்தி சேமிப்பு, கழிவறை வசதி, பெண் குழந்தை கல்வி போன்ற சமூக நல விஷயத்துக்கு அர்ப்பணிக்கும் முறையை பாஜக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.

SCROLL FOR NEXT