புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவையில் துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட பலருடைய சொத்துகளை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடியாகும். அதில், விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.14,000 கோடியும் அடங்கும். அத்துடன் வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகளை விற்று ரூ.1,053 கோடி வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பியோடிய மற்றொரு வைர வியாபாரி மெகுல் சோக்சியின் சொத்துகளை விற்க அனுமதி கோரி வங்கிகளும் அமலாக்கத் துறையும் இணைந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளன. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சோக்சியின் சொத்துகளை மதிப்பிட்டு ஏலம் விடவும், அதில் வரும் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.