குஜராத்தில் நடைபெறவுள்ள 9 சட்டசபை மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மூத்த தலைவர்களை களமிறக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸார் கட்சித் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் அவர் ராஜினாமா செய்த வதோதரா மக்களவை தொகுதி மற்றும் குஜராத்தின் 9 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 13 ல் தேர்தல் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிககளிலும் தங்களுக்கே வெற்றி என ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக நம்புகிறது. இதை முறியடிக்க அம் மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இதற்காக குஜராத் காங்கிரஸின் மூத்த தலைவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என கட்சித் தலைமைக்கு அது கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் காங்கிரஸ் நிர்வாக வட்டாரம் கூறும்போது, “குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பரத் சிங் சோலங்கி, தேசிய செயலாளரான பிரபா தாவியத், துஷார் சவுத்திரி, விக்ரம் மடம் உட்பட மூத்த தலைவர்களை இடைத்தேர்தலில் களமிறக்க வேண்டும் என குஜராத் மாநில தலைமையிடமிருந்து கடிதம் வந்துள்ளது. இவர்கள் நால்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டி யிட்டு படுதோல்வி அடைந்தவர்கள் என்பதால் யோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இந்த 9 தொகுதிகளின் வெற்றி தோல்வியால் ஆளும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும், மக்களவைத் தேர்தலின்போது இருந்த ‘மோடி அலை’ இப்போது இல்லை என நிரூபிப்பதற்காகவே குஜராத் காங்கிரஸார் இத்தகைய கோரிக்கையை வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆளும் பாஜகவுக்கு 117, எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 54 மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 9 இடங்கள் காலியாக உள்ளன.
இந்தத் தொகுதிகளில் செப்டம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20-ல் தொடங்கி 27 வரை மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ல் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30-ம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாள் ஆகும். தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 16-ல் வெளியாகும்.