புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல போர்ப்ஸ் இதழ், உலகளவில் பல்வேறு துறைகளில் சக்தி வாய்ந்தவர்களாக செயல்படும் 100 பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான 21-வது ஆண்டு பெயர் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எச்சிஎல் நிறுவன தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்: இவர் போர்ப்ஸ் பட்டிய லில் 28-வது இடத்தில் இருக்கிறார். மத்திய நிதியமைச்சராக கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2024 தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் நிதியமைச்சரானார். பெண்களுக்கு நிதி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பெண்களும் தொழில் முனைவோராக வரவேண்டும் என்பதற்காக உதவிகளை செய்து வருகிறார்.
ரோஷினி நாடார்: எச்சிஎல் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவர் போர்ப்ஸ் பட்டியலில் 81-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்களில் எச்சிஎல் நிறுவனமும் ஒன்று. எச்சிஎல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சிஇஓ.வாகவும் இருக்கிறார். இவரது தந்தை ஷிவ் நாடார் உருவாக்கிய நிறுவனத்தை மேலும் வளர்ச்சியடைய செய்தது மட்டுமன்றி, ஷிவ் நாடார் அறக்கட்டளையின் பொருளாளராகவும் இருக்கிறார். இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கில், ‘தி ஹேபிடட்ஸ் ட்ரஸ்ட்’ நிறுவியுள்ளார். இதழியல் படித்தவர். கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எம்பிஏ முடித்துள்ளார்.
கிரண் மஜும்தார் ஷா: போர்ப்ஸ் இதழ் பட்டி யலில் 82-வது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் 2024-ல் இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் வரி சையில் 91-வது இடத்தில் இருக்கிறார். பயோடெக்னாலஜி துறையில் முதல் முறையாக புதுமைகளை புகுத்தியவர். பயோகான் நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற்றவர். சர்வதேச அளவில் இவருடைய நிறுவனம் கிளைகளை கொண்டுள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய அளவில் இன்சுலின் உற்பத்தி ஆலையை மலேசியாவில் நடத்தி வருகிறார்.