புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியின் உருவம் பதித்த பையுடன் நாடாளுமன்றத்துக்கு இன்று (டிச.10) வருகை தந்திருந்தார் வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்தி. அதை பார்த்து ரசித்து வரவேற்பைத் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், பிரியங்காவின் சகோதரருமான ராகுல் காந்தி.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. அதானி, உ.பி. சம்பல் வன்முறை, மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
அதே வேளையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தினந்தோறும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
நேற்றைய தினம் (டிச.9) காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர் மற்றும் சப்தகிரி சங்கர் ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் அதானியின் முகமூடியை அணிந்து வந்தனர். அப்போது அவர்களை படம் எடுத்த ராகுல், ‘உங்களை பற்றி சொல்லுங்கள்’ என்றதற்கு, ‘நாங்கள் இருவரும் அனைத்தையும் பல ஆண்டுகளாக சேர்ந்தே செய்கிறோம்.’ என்றனர்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் அதானி உருவம் பதித்த பையுடன் பிரியங்கா வந்தார். அந்த பையில்‘மோடி அதானி பாய் பாய்’ (மோடியும் அதானியும் சகோதரர்கள்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அந்த பையை பார்த்த ராகுல், அதன் டிசைனர் குறித்து கேட்டறிந்ததாக தகவல். ‘இது மிகவும் க்யூட்டாக உள்ளது’ என்றும் ராகுல் சொல்லியதாக தகவல்.
அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்தியுள்ள லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் மறுத்துள்ளது.