இந்தியா

மகாராஷ்டிராவின் 75 தொகுதிகளில் நேரடி மோதல்: பாஜக 65 இடத்தில் வெற்றி; 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின் 75 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதின. இதில் 65 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அந்த மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் பாஜகவுக்கு 17 மட்டுமே கிடைத்தது. ஒரு சில மாதங்களில் பாஜக மீண்டு எழுந்திருக்கிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் அந்த கட்சி 132 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 105, 2014-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் 132 தொகுதிகளை கைப்பற்றி பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.

தேர்தலின்போது பாஜகவும் காங்கிரஸும் 75 தொகுதிகளில் நேரடியாக மோதின. இதில் 65 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பாஜகவின் வரலாற்று வெற்றி குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. அந்த அமைப்பு தேர்தலின்போது மாநிலம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகள்தோறும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். இதேபோல பாஜகவும் பூத்வாரியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக 50 வாக்காளருக்கு ஒரு பாஜக நிர்வாகி நியமிக்கப்பட்டார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

மகளிருக்கான உதவித் தொகை திட்டத்தை பாஜக கூட்டணி அரசு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இது தேர்தல் களத்தை தலைகீழமாக மாற்றி உள்ளது. பெரும்பாலான பெண்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

புதிதாக 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10,000 மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும். முதியோர் ஓய்வூதிய தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும். மின் கட்டணம் 30 சதவீதம் வரை குறைக்கப்படும். விவசாயிகளுக்கு 20 சதவீத மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

மகாராஷ்டிர மக்கள் தொகையில் மராத்தா சமூகத்தினர் 33 சதவீதம் பேர் உள்ளனர். தேர்தலில் மராத்தா சமுதாய தலைவர் மனோஜ் ஜராங்கே ஆளும் கூட்டணிக்கு வேட்பாளர்களை நிறுத்தினார். இறுதி நேரத்தில் பாஜகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்த அவர், வேட்பாளர்களை வாபஸ் பெற்றார்.

மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன்காரணமாக இந்த முறை பாஜகவுக்கு மராத்தா சமூகத்தினரின் வாக்கு கணிசமாக கிடைத்தது. இதுவும் பாஜகவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தவ் தாக்கரே, சரத் பவாரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இந்த முறை பிரதமர் மோடியும் அமைச்சர் அமித் ஷாவுக்கு தங்கள் அணுகுமுறையை மாற்றினர். இரு தலைவர்களும் உத்தவ் தாக்கரே, சரத் பவாரை அதிகமாக விமர்சிக்கவில்லை. இது தேர்தலில் எதிரொலித்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு கிடைத்த அனுதாப வாக்குகள் இந்த முறை அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களின் அதிதீவிர பிரச்சாரத்தால் இந்துக்களின் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT