உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குண்டர்கி தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் இந்து வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குண்டர்கி தொகுதியில் (மொரதாபாபத் மாவட்டம்) பாஜக சார்பில் போட்டியிட்ட இந்து வேட்பாளர் ராம்வீர் சிங் 1,44,791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் உள்ளிட்ட 11 முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக இந்த தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து குண்டர்கி தொகுதியின் பாஜக பொறுப்பாளரும் மாநில அமைச்சருமான ஜேபிஎஸ் ரத்தோர் கூறும்போது, “என்னுடைய கற்பனைக்கு எட்டாத வெற்றியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி. சமாஜ்வாதி மற்றும் அக்கட்சி வேட்பாளர் மீதான அதிருப்திதான் இதற்கு காரணம் என கருதுகிறேன். அதேநேரம் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியம் இல்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் அனைவரும் பயனடைந்துள்ளனர். இதை முஸ்லிம்கள் உணர்ந்ததால்தான் அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்” என்றார்.