மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகரும், பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் அடைந்ததுள்ளார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடர்வது கவனிக்கத்தக்கது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய நிலவரபடி 288 தொகுதிகளில் 233-ஐ மகாயுதி கூட்டணியும், 50-ஐ மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் வசப்படுத்துகின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடிகரும், பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் சுமார் 18 சுற்றுகள் எண்ணப்பட்ட பிறகும் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்விடைந்தது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, 41 லட்சம் ரூபாய் சொத்து மட்டுமே இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே) வேட்பளார் ஹரூன் கான் வெற்றி பெற்றார். பிக்பாஸ் புகழ் அஜாஸ் கானை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் உலாவும் ட்ரோல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனது படுதோல்விக்கு இவிஎம் இயந்திரத்தை சாடியுள்ளார்.