இந்தியா

ராணுவம், கடற்படை, விமானப்படை அருணாச்சல பிரதேசத்தில் கூட்டுப் பயிற்சி

செய்திப்பிரிவு

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியை நடத்தின.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அதுல் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாள் கூட்டுப் பயிற்சியை வெகு சிறப்பான முறையில் நடத்தின.

இந்தப் பயிற்சிக்கு பூர்வி பிரஹார் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. உளவுத்துறை தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு, விரைவாக அணிதிரட்டுதல், உளவுப்பணி, வரிசைப்படுத்துதல், படைகளின் செயல்பாடு ஆகிய பயிற்சிகளை முப்படை வீரர்களும் கூட்டாக மேற்கொண்டனர்.

இந்தப் பயிற்சியின்போது கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட முப்படையினர், வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான உயர் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி துல்லிய பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்த பயிற்சியில் கிழக்குப் பிரிவு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.சி.திவாரி, ஏர் மார்ஷல் ஐஎஸ் வாலியா (கிழக்கு ஏர் கமாண்ட்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு கட்டமைப்புகள், வழிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்தது என்று லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.சி. திவாரி அப்போது குறிப்பிட்டார். இவ்வாறு அதுல் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT