மகாராஷ்டிராவில் பாஜக தலைவர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தார் என்று மகா விகாஸ் அகாடி கூட்டணித் தலைவர் ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
இதனிடையே பால்கர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு பாஜக வினோத் தாவ்டே, நேற்று பண விநியோகம் செய்தார் என்று மகா விகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான ஹிதேந்திர தாக்குர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாஜக மூத்த தலைவரும், பொதுச் செயலருமான வினோத் தாவ்டே, பண விநியோகம் செய்வதாக எனக்கு ரகசியத் தகவல் வந்தது. இதை பாஜக தலைவர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர். பால்கர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரூ.5 கோடியை வினோத் தாவ்டே வழங்கியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர்களுள் ஒருவரான வினோத் தாவ்டே, இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டார் என நினைத்தேன். ஆனால் அவர் இங்கு வந்தது நிரூபணமாகியுள்ளேன். பண விநியோகத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.