துபாய்: அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 1,340 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதொடர்பாக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதில்: பல்வேறு உலக நாடுகளில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் வேலை செய்து வந்த 1,900 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அரபு நாடுகள் முதலிடத்தில் உள்ளன. அங்கு மட்டும் 1,340 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 511 பேரும், சவுதி அரேபியாவில் 354 பேரும், குவைத்தில் 162 பேரும், ஓமனில் 146 பேரும், பஹ்ரைனில் 101 பேரும், கத்தாரில் 66 பேரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக மலேசிய நாட்டில் 131 இந்தியர்களும், அமெரிக்காவில் 62 பேரும், இத்தாலி, கனடா, பிரிட்டனில் தலா 30 க்கும் மேற்பட்டோரும் இந்த காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அரபு நாடுகளில் மட்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.