புதுடெல்லி: பிஹாரின் தர்பங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைப்பதை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பிஹாரின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இதர வளர்ச்சி திட்டங்கள் ரூ.12,100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும். இதன் மூலம் பிஹாரின் மிதிலா, கோஷி மற்றும் திர்குத் பகுதி மக்கள் பயன்பெறுவதோடு, அருகில் உள்ளபகுதி மக்களும், மேற்கு வங்கத்தினரும் பயன் அடைவர். நோபாளத்தில் இருந்து கூட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற முடியும்.
ஏழை மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதில் முந்தைய அரசுகள் கவனம் செலுத்தவில்லை. பிஹாரின் சுகாதார சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் நிதிஷ் குமார் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 4 கோடிக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வெற்றி பெற் றுள்ளது. சுதந்திரத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின்பும் டெல்லியில் மட்டுமே ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது. கூடுதல் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படாததற்கு காங்கிரஸ் அரசே காரணம்.
எயம்ஸ் மருத்துவமனைகளை நாடுமுழுவதும் விரிவுபடுத்த எனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது நாட்டின் பல இடங்களில் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகளை எனது அரசு உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.