இந்தியா

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை: 8 அரசு அதிகாரிகளிடம் ரூ.23 கோடி சிக்கியது

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீஸார் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.86 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின.

கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள அரசு அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டுள்ள‌தாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி, ராம்நகர், ஹாசன், ஹாவேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 அரசு அதிகாரிகளின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், நெருக்கமானவர்களின் அலுவலகங்கள் உட்பட 37 இடங்களில் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நட‌ந்த இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட‌ போலீஸார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீஸார் விடுத்துள்ள அறிக்கையில், “ரமணாநகரில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட இயந்திரப் பொறியாளர் பிரகாஷ் வீட்டில் ரூ.4.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளும், சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பெலகாவி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தாலேஷ்வரின் வீட்டில் ரூ.2.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சிக்கின.

பெலகாவியில் உள்ள நிப்பானி கிராமத்தின் நிர்வாக அலுவலராக உள்ள விட்டல் ஷிவப்பாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெளியே சென்ற விட்டல் ஷிவப்பாவை மடக்கி பிடித்தபோது ரூ.1.1 கோடி ரொக்க பணம் சிக்கியது. மைசூரு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அர்ஜூனின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.7 கோடி மதிப்பிலான சொத்துகள் சிக்கின.

மொத்தமாக 8 அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து, கணக்கில் வராத ரூ.22.86 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க, வைர‌ நகைகள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து 8 பேரின் மீது லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT