செராய்கேலா (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால், மாநிலத்துக்குள் ஊடுருவியவர்களைக் கண்டறிந்து அவர்களை விரட்டியடிக்க குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செராய்கேலா மற்றும் சிம்டேகா நகரங்களில் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “ஜார்க்கண்டில் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நமது மகள்களை திருமணம் செய்து ஊடுருவல்காரர்கள் நமது நிலத்தை அபகரிக்கின்றனர். பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொண்டால் ஊடுருவல்காரர்களுக்கு நிலம் மாற்றப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவோம். ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்களை விரட்டியடித்து நிலத்தை மீட்க ஒரு குழுவை அமைப்போம்.
காங்கிரஸ் கட்சி பழங்குடியினரை தொடர்ந்து அவமதித்த கட்சி. சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகளாக பழங்குடியினர் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவரானதில்லை. முதன்முறையாக, ஏழை பழங்குடியினரின் மகளான திரவுபதி முர்முவை நாட்டின் குடியரசுத் தலைவராக்கினார் மோடி.
ஜார்க்கண்ட்டில் உள்ள ஹேமந்த் சோரன் அரசு ஊழல் மிகுந்த ஒரு மோசடி அரசாக உள்ளது. ரூ.300 கோடி மதிப்புள்ள ராணுவ நிலத்தை அபகரித்து ஊழல் செய்துள்ளனர். ரூ.1000 கோடிக்கு சுரங்க ஊழல் நடந்துள்ளது. மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இண்டியா கூட்டணி, தங்களுக்கு ஆதரவான ஒருசிலர் கோடீஸ்வரர்களாக ஆவதற்காக பாடுபடுகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நமது சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க உழைக்கிறார்.
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ஆனால், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைத் தொட நாங்கள் விடமாட்டோம்.
இந்த தேர்தல் ஜார்க்கண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். ஜார்க்கண்டில் ஆட்சியில் உள்ள இண்டியா கூட்டணி அரசு, ஒட்டுமொத்த மாநிலத்தையும் சீரழித்துவிட்டது. ஜார்க்கண்ட் நாட்டிலேயே மிகவும் வளமான மாநிலம். ஆனால் துரதிருஷ்டவசமாக, இங்குள்ள மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். இங்குள்ள அரசு பயனற்றதாக இருப்பதால், ஜார்க்கண்ட் இளைஞர்கள் வேலை தேடி நாடு முழுவதும் செல்ல வேண்டியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் மாநிலத்தை மிகவும் வளமான மாநிலமாக மாற்றுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜார்க்கண்ட் இளைஞர்கள் உழைப்புக்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமிருக்காது. எங்களை நம்புங்கள், நாங்கள் சொல்வதைச் செய்வோம்.
ஜார்க்கண்டில் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து அதன் மூலம் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இங்கு பாஜக ஆட்சி அமைந்ததும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வினாத்தாள்களை கசியவிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கம்பிகளுக்குப் பின்னால் இருப்பார்கள்” என்று அமித் ஷா உரையாற்றினார்.