மும்பை: “அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்வானதால் பல நாடுகள் பதற்றம் அடைகின்றன. ஆனால், இந்தியாவுக்கு அந்தப் பதற்றம் இல்லை” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய ஜெய்சங்கர், "உலகில் மாற்றம் நிகழ்கிறது. மாற்றத்துக்கு நாமே ஓர் உதாரணம். நமது பொருளாதாரத்தின் வலிமை, அதன் தரவரிசை, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் வீச்சு, இருப்பு, இந்திய வல்லுநர்கள் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலக சமச்சீர் தன்மை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதிகார சமநிலையில் மேற்கு மட்டுமல்ல, கிழக்கும் தனது விளையாட்டை தீவிரமாக விளையாடுகிறது. இது தவிர்க்க முடியாதது. ஏனெனில், காலனித்துவ காலத்துக்குப் பிறகு இந்த நாடுகள் சுதந்திரம் பெற்றவுடன், அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கான சொந்தக் கொள்கைகளை தேர்வு செய்யத் தொடங்கினர். பின்னர் அவை வளர்ந்துள்ளன. சில வேகமாக வளர்ந்தன, சில மெதுவாக வளர்ந்தன, சில சிறப்பாக வளர்ந்தன. இதன் ஊடாக, ஆளுமைத் தரமும் தலைமைத்துவத் தரமும் உள்ளே வந்தன. எனவே, நிலையானது மற்றும் மாற்றம் இரண்டும் இருக்கிறது என்ற எண்ணம் உள்ளது.
இன்னும் பலதரப்பட்ட, பல துருவ உலகத்தை நோக்கிய போக்கு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல், நாடுகள் முன்னேறும் காலகட்டம் ஒன்றுண்டு. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஏற்கெனவே வலிமையாக உள்ள மேற்கத்திய பொருளாதாரங்கள், தொழில்மயமான பொருளாதாரங்கள் இன்னும் வலுவாகவே உள்ளன. அவற்றுக்கான முக்கியத்துவம் இன்னமும் உள்ளது. அந்த நாடுகள் இன்னமும் முதன்மையான முதலீட்டு இலக்குகளாக உள்ளன. பெரிய சந்தைகள், வலுவான தொழில்நுட்ப மையங்கள், புதுமைக்கான மையங்கள் என்பதாக அவை உள்ளன. அதற்காக, அதை மிகைப்படுத்தி, உலகத்தைப் பற்றிய நமது சொந்த புரிதலை சிதைக்க வேண்டாம்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தொலைபேசியில் அவரை அழைத்த முதல் மூவரில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். இந்தியாவும், பிரதமர் மோடியும் பல நாடுகளின் தலைவர்களுடன் நல்லுறவை உருவாக்கியுள்ளது. நல்லுறவுகளை உருவாக்குவதில் பிரதமர் மோடிக்கு இயற்கையான திறன் உள்ளது. அது பெரிதும் உதவுகிறது. அதோடு, இந்தியாவில் அவரால் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன். டொனால்டு ட்ரம்ப் உடன் பிரதமர் மோடிக்கு வலிமையான தனிப்பட்ட உறவு உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதை அடுத்து பல நாடுகள் பதற்றமாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், அத்தகைய நாடுகளில் நிச்சயம் இந்தியா இல்லை" என தெரிவித்தார்.