மும்பை: கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதை உறுதி செய்யும் பணியில் 180-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு வந்துள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் சிவாஜி நகர், மும்பாதேவி, பைகுல்லா, மத்திய மாலேகான் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அருகில் உள்ள தொகுதிகளை விட அதிகமாக இருந்தது.
முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை மற்றும் கடந்த வருடத்தில் வாக்காளர்கள் மத்தியில் தாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வே இதற்கு காரணம் என மராத்தி முஸ்லிம் சேவா சங்கம் கூறுகிறது.
180-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளுடன் இந்த சங்கம் கைகோத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்களை இது நடத்தியது.
இந்த அமைப்பின் தலைவர் பக்கீர் முகம்மது தாக்குர் கூறுகையில், ‘‘இந்த கூட்டங்களின் விளைவாக மக்களவைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது, இது முந்தைய தேர்தல்களின் சராசரியை விட 15% அதிகமாகும்.
மதச்சார்பற்ற வேட்பாளர்களை ஆதரிக்குமாறும், அரசியலமைப்பின் நலனுக்காக வாக்களிக்குமாறும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதற்கு பலன்கிடைப்பதற்காக நாங்கள் மற்றஅமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களுடன் கைகோத்துள்ளோம். மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினோம். இது வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது” என்றார்.
மகாராஷ்டிரா ஜனநாயக மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷகிர் ஷேக் கூறுகையில், ‘‘கடந்த 2 மாதங்களில் மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 18 கூட்டங்கள் உட்பட மாநிலத்தில் 70 கூட்டங்களை எங்கள் மன்றம் நடத்தியுள்ளது.
சிஏஏ, பொது சிவில் சட்டம், வக்பு மசோதா போன்ற பல பிரச்சினைகள் முஸ்லிம்களை வெளியே வந்துவாக்களிக்க தூண்டியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் சேர்ப்பு இயக்கம் உதவியது. மும்பையில் குறைந்தபட்சம் 9 லட்சம் புதிய வாக்காளர்களை நாங்கள் சேர்த்தோம். இது நேர்மறையான முடிவுகளை கொடுத்துள் ளது’’ என்றார்.
இதுபோல் மகாராஷ்டிர தேர்தலிலும் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என அந்த அமைப்புகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.