மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 
இந்தியா

அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருள் விற்பனை: அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.2,364 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: “ சிறப்பு பிரச்சாரம் 4.0” வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்து தூய்மையாக மாற்றுவது இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம். இது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

2021 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் கழிவுகளாக தேங்கிய பொருட்களை விற்பனை செய்த வகையில் மத்திய அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபரில் அரசு அலுவலகங்களில் இந்த கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.650 கோடியை மத்திய அரசு பெற்றுள்ளது. இந்த சிறப்பு பிரச்சாரத்தின் மூலம் பல துறைகள் தங்களது தூய்மை இலக்கில் 90-100% நிறைவு செய்துள்ளது. இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “ திறன்மிகு மேலாண்மை மற்றும் செயலூக்கமான அணுகு முறை தூய்மை இயக்கம் வெற்றியடைய வழிவகுத்துள்ளது. மேலும், கூட்டு முயற்சி எவ்வாறு நிலையான முடிவுகளுககு வழிகாட்டும் என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது. தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் அரசின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது" என்றார்.

SCROLL FOR NEXT