மகாராஷ்டிர மாநிலத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்) ஆகிய கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாதி கூட்டணி கொள்ளையடித்தது. சக்கரம், பிரேக்குகள் இல்லாத வண்டியாக இந்த தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி வந்துள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள அனைவரும் முதல்வர் என்ற டிரைவர் சீட்டில் அமர போட்டி போடுகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் 288 தொகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் போட்டியிடும் மகாயுதி (பாஜக, சிவசேனா (ஏக்நாத்), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியில் நேற்று அவர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின்போது மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சக்கரங்கள் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்று அமைந்துள்ளது. அங்குள்ள அனைத்துத் தலைவர்களும் டிரைவர் இருக்கையில் (முதல்வர் பதவி) அமர போட்டி போடுகின்றனர். ஆட்சி, அதிகாரத்துக்காக அவர்கள் வெற்றி பெற நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக அவர்கள் அரசியலுக்கு வரவில்லை.
மகாராஷ்டிர மாநில வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்கள் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் மக்களை கடவுளின் இன்னொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால், சிலர் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்காக அரசியலில் உள்ளனர். மகாராஷ்டிர மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆதரவு தருகிறார்கள். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும்.
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறும் போது காங்கிரஸ் கட்சியால் அதை, பொறுத்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் விழிப்புடன் இருக்க வேண்டும். மகளிர் அதிகாரம் பெறுவதை காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகள் விரும்புவதில்லை. காங்கிரஸ் இப்போது பழங்குடியினர் மற்றும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களை ஒருவரையொருவர் மோத வைக்க முயற்சி செய்கின்றனர். இது மிகப்பெரிய சதியாகும்.
மகாயுதி கூட்டணி அரசால் இங்கு நல்லாட்சியை வழங்க முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாஜக தலைமையிலான ஆட்சி இங்கு நல்லபடியாக நடைபெற்றது. மதவாத சக்திகளை ஊக்குவத்து நாட்டைத் துண்டாட சதி செய்கிறது காங்கிரஸ்.
ஜம்மு-காஷ்மீரில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன. அங்கு ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்புக் கிடைத்ததும், காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அரசியலமைப்புப் பிரிவை 370-வது பிரிவைக் கொண்டு வரவேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மகளிர் நலனுக்காக மகாராஷ்டிர அரசு மாஜி லட்கி பஹன் என்ற பெயரில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக புதிய திட்டத்தை மகாயுதி கூட்டணி அரசு கொண்டு வந்தது. ஆனால், அந்தத் திட்டம் குறித்து பொய்யான கதைகளை காங்கிரஸ் பேசி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.