இந்தியா

தவறான செய்தியை பகிர்ந்த கர்நாடக மாநில பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

தவறான செய்தியை ‍பகிர்ந்ததாக க‌ர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக எம்பியும் பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா நேற்றுமுன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில், விவசாயி தற்கொலை தொடர்பான‌ செய்தி ஒன்றை பகிர்ந்தார். மேலும், “கர்நாடகாவில் உள்ள ஹாவேரியில் வக்பு வாரியத்தின் தவறான முடிவால் ருத்ரப்பா சென்னப்பா பாலிகெ என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முதல்வர் சித்தராமையாவும் வக்பு வாரிய அமைச்சர் ஜமீர் அகமது கானும் பொறுப்பேற்க வேண்டும்” என குற்றம்சாட்டியிருந்தார். இந்த செய்தி பொய்யானது என ஏராளமானோர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதிவை நீக்கினார்.

இதனிடையே ஹாவேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷிவகுமார், “ருத்ரப்பா சென்னப்பா பாலிகெ 6.1.2022 அன்று கடன் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில கன்னட இணைய தளங்கள் அவர் தற்போது இறந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தி இணைய தளங்களின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான செய்தியை பகிர்ந்து, அவதூறு பரப்பியதாக தேஜஸ்வி சூர்யா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT