லக்னோ: பேட்டரி, செயின், பிளேடு போன்ற 65 பொருட்களை சாப்பிட்ட உ.பி. சிறுவன் குடல் பாதிப்பால் உயிரிழந்தான்.
உத்தர பிரதேசம் ஹத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆதித்யா. 9-ம் வகுப்பு படிக்கிறான். இவனுக்கு கடந்த மாதம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவனது தந்தை சஞ்சசேட் சர்மா, மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுகிறார். அவர் தனது மகனை ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சி.டி ஸ்கேனில் செய்து பார்த்ததில் மூக்கில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மூக்கில் உள்ள அடைப்பு அகற்றப்பட்டது.
அதன்பின் அவனுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. அலிகர் நகரில் உள்ள மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவனது வயிற்றில் 19 பொருட்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. அதன்பின் ஆதித்யாவை நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அங்கு சோதனை செய்து பார்த்தபோது ஆதித்யா வயிற்றில் 42 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆதித்யா டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது பேட்டரி, செயின், ஸ்கூரு, பிளேடு துண்டுகள் என 65 பொருட்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 65 பொருட்களையும் அகற்றினர். இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக ஆதித்யா வயிற்றில் இருந்ததால், குடல் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆதித்யா கடந்த மாதம் 28-ம் தேதி இறந்தான்.
ஆதித்யாவுக்கு இதற்கு முன் உடல்நல பாதிப்போ, மன நல பாதிப்போ இருந்ததில்லை. அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் நடந்து முடிந்ததாக அவனது தந்தை சர்மா தெரிவித்தார்.