புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 69.
யார் இந்த பிபேக் டெப்ராய்: தனது பள்ளிப்படிப்பை நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் முடித்த பிபேக் டெப்ராய், மேற்படிப்புகளை கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், கேம்ப்ரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் முடித்தார். கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, புனேவில் உள்ள கோகலே இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பாலிட்டிக்ஸ் மற்றும் எக்கனாமிக்ஸ், டெல்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் ஆகியவைகளில் பணியாற்றியுள்ளார் மேலும், சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான நிதி / யுஎன்டிபி திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பிபேக் டெப்ராய், 1994 முதல் 1995 வரை பொருளாதார விவகாரங்கள் துறையிலும், 1995 முதல் 1996 வரை தேசிய பண்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலிலும், 1997 முதல் 2005 வரை ராஜீவ் காந்தி சமகால ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார்.
மேக்ரோ பொருளாதாரம் மற்றும் பொதுநிதியியலில் நிபுணத்துவம் பெற்ற பிபேக் டெப்ராய், பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம் மற்றும் ரயில்வே துறைகள் பற்றி பரவலாக எழுதினார். மேலும் அவர் மகாபாரதம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட பாரம்பரிய சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புக்காவும் அறியப்பட்டார்.
பிரதமர் மோடி இரங்கல்: பிபேக் டெப்ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்தி மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிபேக் டெப்ராய் ஜி ஒரு சிறந்த அறிஞர். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்.
அவரது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் பரப்பில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். பொது கொள்கைகளுக்கான தனது பங்களிப்புகளைத் தாண்டி, நமது பழங்கால இலக்கியங்களில் பணியாற்றுவதிலும், அவற்றை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் பிபேக் டெப்ராயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.