மும்பை: கடந்த அக்டோபர் 12-ம் தேதி தசரா கொண்டாட்டத்தின்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. சல்மான் கான் மற்றும் தாவூத் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாகவே பாபா சித்திக்கை கொலை செய்துள்ளோம் என்று அக்கும்பல் தெரிவித்தது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. கடந்த வாரம் சல்மான் கானுக்கும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக்குக்கும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். அவ்விருவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுதொடராக ஜீஷன் சித்திக் புகார் அளித்த நிலையில், போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து நொய்டாவில் டாட்டூ வேலை செய்யும் குர்பான் கான் என்ற 20 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். “சல்மான் கானையும் ஜீஷன் சித்திக்கையும் அச்சுறுத்தி பணம் பறிக்கவே இவ்வாறு மெசேஜ் அனுப்பினேன்” என்று குர்பான் கான் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ரூ.10 கோடி கேட்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ரூ.2 கோடி கேட்டு மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. பாபா சித்திக் கொலைத் தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.