இந்தியா

டானா புயல் பாதிப்பு: களத்தில் வேகம் காட்டும் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் @ ஒடிசா

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கடுமையான டானா புயல் பயங்கர சீற்றத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கரையைக் கடந்தது. இதனிடையே ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் சாலையோரங்களில் வேரோடு சரிந்து விழுந்த மரங்களை அகற்றுவதன் மூலம், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு மீட்பு படை (ODRAF) மீட்புப் பணிகளைத் தொடங்கி இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை காலை 8.23-க்கு வெளியிட்ட அறிக்கையில், “டானா புயல் கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. அதன் இறுதிப் பகுதி தற்போது நிலத்துக்குள் நுழைந்துள்ளது. அடுத்த ஒன்று இரண்டு மணி நேரத்துக்கு புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடரும். இந்த அமைப்பு வடக்கு ஒடிசா வழியாக வடமேற்கு நோக்கி நகரும். வெள்ளிக்கிழமை மதியம் வரை புயல் கரையைக் கடக்கும். பின்பு வலுவிழந்து சூறாவளி புயலாக மாறும். அதன் போக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பத்ரக் மாவட்டத்துக்கான பொறுப்பாளரும், மாநிலத்தின் கல்வி அமைச்சருமான சூர்யபன்ஷி சுராஜ் கூறுகையில், “இது வரை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால், பெரிய அளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. பத்ரக் மாவட்டத்தின் தம்ரா பகுதியில் பலத்த மழை பெய்திருந்தாலும் என்டிஆர்எஃப், ஒடிஆர்ஏஎஃப் தங்களின் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

கேந்திரபாடா மாவட்டத்தின் ராஜ்நகர் தாசில்தார், அஜய் மொஹந்தி கூறுகையில், “பிடர்கனிகாவில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது, சில ஓலை வீடுகள் சேதமடைந்தது தவிர வேறு பெரிய சேதங்கள் எதுவும் இல்லை. காற்றின் வேகம் 80 முதல் 90 கி.மீமாக குறைந்துள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில் மழைத் தொடர்ந்து பெய்துவருகிறது. வியாழக்கிழமை இரவில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், சில நீர்நிலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது.” என்று தெரிவித்தார்.

கடந்த 6 மணி நேரத்தில் பத்ரக்கின் சந்தபாலியில் அதிகபட்சமாக 131.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக பாலசோரில் 42.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டானா புயலின் போது ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான பத்ரக், கேந்திரபாரா, பாலசோர் மற்றும் அருகிலுள்ள ஜெகத்சிங்பூரில் காற்றின் வேகம் திடீரென மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை அதிகரித்தது. அதிகனமழையும் பெய்தது.

இந்நிலையில் புயலுக்குப் பிந்தைய மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மோகன் சரண் மாஜி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். புயல் கரையைக் கடந்த நிலையில் சேத விவரங்கள் குறித்தும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் ராஜீவ் பவனில் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஒடிசாவில் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்துவிட்டதால் ஒடிசாவின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் காலை 8 மணி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. புயல் காரணமாக இந்திய ரயில்வேயும் 20-0க்கும் அதிகமான ரயில்களை ரத்து செய்துள்ளது.

SCROLL FOR NEXT