சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது, இதுவரை 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 5 பாரத ரத்னா பதக்கங்களை தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணயச்சாலைப் பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 3 பேருக்கு மட்டுமே இந்த விருதை வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இந்நிலையில் 5 பதக்கங்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது ஏன் என்று உள்துறை அமைச்சக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, “5 பதக்கங்கள் தயாரிக்குமாறு கூறியதாலேயே 5 பேருக்கு விருது வழங்கப்படும் என்று கூறிவிட முடியாது. இந்த ஆண்டு வழங்கியதுபோக, மீதமுள்ளவற்றை கையிருப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
பாஜகவைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாரத ரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. அதே போன்று சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் இவ்விருதை வழங்க வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த முறை பாரத ரத்னா விருதை நேதாஜிக்கும், வாஜ்பாய்க்கும் வழங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை வரும் 15-ம் தேதி தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த விருதை வழங்கும் நடைமுறையைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பரிந்துரை கடிதம் அனுப்பினாலே போதுமானதாகும்.
2013-ம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகள், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டது.