இந்தியா

பெங்களூருவில் கனமழையால் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்: 3 பேர் சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக யெலஹங்கா பகுதியில் 157 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் இதுவரை 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டைல்ஸ் ஒட்டும் பணியாளர்கள், கான்க்ரீட் போடுபவர்கள், பிளம்பர்கள் என மொத்தம் 20 பேர் அந்த கட்டிடத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏழு அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடம் சரியும் சிசிடிவி காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT