இந்தியா

கனமழையால் ஸ்தம்பித்த மும்பை

செய்திப்பிரிவு

மும்பையில் இன்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால்  நகரின் பல இடங்கள் ஸ்தம்பித்துள்ளன.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலையிலிருந்து மழை கொட்டி தீர்த்ததால் நகரின் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளதால் மும்பை வாசிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து மும்பை வானிலை ஆய்வு மையம் தரப்பில், ”சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மும்பையில் 231 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொலபாவில் 99 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பேருந்துகள், ரயிகள்கள் தாமதம்

கடும் மழை காரணமாக மும்பை புற நகர் ரயில்கள் வந்தடைந்தவது தாமதமாகியுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போலீஸார் தொடர்ந்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT