பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி, லக்னோ தொகுதி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற ராஜ்நாத் சிங், தனது வேட்பு மனுவினை மாவட்ட ஆணையரிடம் தாக்கல் செய்தார். அதனை லக்னோ எம்.பி. லால்ஜி டான்டன் முன்மொழிந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பேசிய ராஜ் நாத் சிங், “நாட்டில் பாஜக அலை வீசுகிறது. அனைத்து தொண்டர்களும் தங்களையே ராஜ் நாத் சிங் என்று மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நாம் ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியுடன், ஒவ்வொரு வீதியிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வாக்கு சேகரிக்க வேண்டும், இதில் சாதி, மத வேறுபாடுகள் இருக்க கூடாது” என்றார்.
ராஜ் நாத் சிங்கை எதிர்த்து அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அபிஷேக் மிஷ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளராக நடிகர் ஜாவித் ஜாஃப்ரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மொஹம்மத் சர்வார் மாலிக், பகுஜன் சமாஜ் வேட்பாளர் நகுல் துபே ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.