வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க விசா வழங்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா என்ற நாவல் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியதில் முஸ்லிம் அமைப்புகள் அவருக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன.
1994ஆம் ஆண்டு முதல் வேறு நாடுகளில் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தங்க 2 மாதங்களே அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டு விசா அவருக்கு இந்திய அரசால் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மார்க்கண்டேய கட்ஜு, எழுத்தாளர் நஸ்ரின் இந்தியாவிலேயே நிரந்தரமாக வாழ அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், 'லஜ்ஜா' என்ற நாவலை அவர் எழுதியது முதல் மதவெறியர்கள் அவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட அராஜகத் தாக்குதல்கள் பற்றியே அந்த நாவல் சித்தரிக்கிறது. இஸ்லாமுக்கு எதிராக அந்த நாவலில் எதுவும் இல்லை” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு தஸ்லிமா வங்கதேசத்தை விட்டு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய பிறகு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா என்று தங்கிவந்தார். இப்போது அவர் ஸ்வீடன் நாட்டுக் குடுயுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.