புதுடெல்லி: ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் 68 தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு 13 இடங்களை பாஜக மேலிடம் ஒதுக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 81 தொகுதிகளுக்கும் நவம்பர் 13, நவம்பர் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் அகில ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் (ஏஜேஎஸ்யு), ஐக்கிய ஜனதா தளம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் தொகுதிப் பங்கீடுஇறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அசாம் முதல்வரும், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக இணைப் பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: வரும் ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக 68 இடங்களில் போட்டியிடும். எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும். அதன்படி ஏஜேஎஸ்யு 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்ஜேபி ஒரு தொகுதியிலும் போட்டியிடும். இதற்காக கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது ஏஜேஎஸ்யு தலைவர் சுதேஷ் மகதோ, ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
100 வயதை கடந்தவர்கள் ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 462 ஆண்கள், 533 பெண்கள் என மொத்தம் 995 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநில வாக்காளர் பட்டியலின்படி மாநிலத்தில் மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.13 லட்சம் பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆவர். ஜார்க்கண்டில் அனைத்து வாக்குச் சாவடிகளும் தரை தளத்தில் அமைக்கப்படும். இவற்றில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்வு தளங்கள் அமைக்கப்படும். மேலும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஜார்க்கண்டில் நவம்பர் 13-ம் தேதி முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 43 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாளாகும். மாநிலத்தில் மொத்தமுள்ள 2.60 கோடி வாக்காளர்களில் 11.84 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.