தீபக் பாபரியா 
இந்தியா

ஹரியானா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜினாமா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று, கட்சியின் ஹரியானா பொறுப்பாளர் தீபக் பாபரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இத்தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று ஹரியானா காங்கிரஸுக்கான மேலிட பொறுப்பாளர் தீபக்பாபரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துஉள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த வாரம் ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி விட்டேன். தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்றும் எனது உடல்நிலை காரணமாகவும் இந்த முடிவுக்கு வந்தேன்” என்றார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் எதிர்பாராத தோல்வி குறித்து ஆய்வு செய்ய கட்சியின் தலைமை சமீபத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது. தோல்விக்கான காரணங்களை புரிந்துகொள்வதற்காக அனைத்து வேட்பாளர்களுடனும் பேசுவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு சாத்தியமான அனைத்து காரணங்கள் குறித்தும் தலைவர்கள்விவாதித்தனர். கட்சி வேட்பாளர்கள் கூறுவது போல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) உள்ள முரண்பாடுகள் குறித்த புகார்களை விசாரிக்கவும், தீர்வு காணவும் குழுவை அமைத்தனர். இந்த முரண்பாடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும், அதுவரை அந்தஇவிஎம்களை சீலிட்டு பாதுகாக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT