இந்தியா

ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன்: உண்ணாவிரதப் போராட்டத்தில் பிஹார் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பிஹாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை எனில், ஆகஸ்ட் 15-ல் தீக்குளிக்கப்போவதாக, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிஹாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதிஷ்பூர் தொகுதியைச் சேர்ந்த ராஷ்டீரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.தினேஷ் குமார் சிங். இவர் தமது மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, அம்மாநில முதல்வரின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரை பிஹார் போலீஸார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தினேஷ் குமார் அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் வியாழக்கிழமைக்குள் பிஹார் மாநிலத்தை வறட்சி மிகுந்த மாநிலமாக அறிவிக்காவிட்டால், அதற்கு அடுத்த நாளான சுதந்திரத் தினத்தன்று தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தினேஷ் குமார் சிங் கூறும்போது, "பிஹார் மாநிலத்தின் பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக நான் தற்போது போராடிக் கொண்டிருக்கிறேன்.

மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை" என்றார்.

SCROLL FOR NEXT