இந்தியா

பிஹார் விஜயதசமி விழாவில் மாணவிகளுக்கு வாள் வழங்கிய பாஜக எம்எல்ஏ

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரின் சீதாமரி மாவட்டத்தில் விஜயதசமி கொண்டாட்டத்தில் மாணவிகளுக்கு பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் குமார் வாள்களை விநியோகம் செய்தார்.

சீதாமரி நகரின் கப்ரால் சாலையில் நேற்று முன்தினம் விஜயதமி கொண்டாடப்பட்டது. இதில் பாஜகஎம்எல்ஏ மிதிலேஷ் குமார் பங்கேற்று பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்களை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது சகோதரிகளை தீயவர்கள் எவரேனும் தொட முயன்றால் அவரது கை இந்த வாளால் துண்டிக்கப்படும். தீயவர்களின் கைகளை வெட்டும் திறன் கொண்டவர்களாக நமது சகோதரிகளை நாம் உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் நானும் நீங்களும் இதைச் செய்ய வேண்டும். நமது சகோதரிகளுக்கு எதிராக தீய எண்ணம் கொண்ட அனைவரும் அழிக்கப்பட வேண்டும்” என்றார்.

விஜயதசமி விழாவில் சிறுமிக்கு வாள் வழங்கிய பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் குமார்.தனது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த மிதிலேஷ் குமார், தீயவர்களுக்கு எதிராக செயல்பட மக்களை குறிப்பாக பெண்களை ஊக்கப்படுத்தினார். பூஜைக்கு வந்த இடத்தில் பல்வேறு வகை துப்பாக்கிகள் மற்றும் வாள்களை வைத்து மிதிலேஷ் குமார் வணங்கினார். சீதாமரி பாஜக எம்எல்ஏவான மிதிலேஷ் குமார் நவராத்திரி தொடக்க நாளில் துர்கா பூஜை பந்தல்கள் பலவற்றுக்கு சென்று மாணவிகளுக்கு வாள்களை விநியோகம் செய்தார். இதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

SCROLL FOR NEXT