அமராவதி: ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு, மதுபான கடைகள் மீண்டும் தனியாருக்கே டெண்டர்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் 3,396 மதுபான கடைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1,800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் மதுபான விற்பனையில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது. ஜெகன் ஆட்சியில் அவரது ஆட்களே மதுபான ஆலைகளை அமைத்து, அதில் மலிவான மதுபானங்களை தயாரித்து, அவற்றை அதிக விலைக்கு அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பாக தற்போதைய சந்திரபாபு அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மதுபான கடைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் ஆந்திராவில் பழையபடி, தனியார் கடைகளுக்கு டெண்டர் விடுவது என அமைச்சரவையில் தீர்மானம் செய்யப்பட்டது. இதில் 10 சதவீதம் கள் இறக்கும் பூர்வ குடிகளுக்கு உரிமம் வழங்குவது எனவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கு 12-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 3,396 மதுபான கடைகளுக்கு விண்ணப்பங்கள் மூலமாக மட்டுமே அரசுக்கு சுமார் ரூ.1,800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 90,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசுக்கு விண்ணப்பங்கள் மூலமாகவே ரூ.1800 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. கடைசி நாளில் மட்டும் 24,014 விண்ணப்பங்கள் போடப்பட்டுள்ளன. அதன்படி ஒரு கடைக்கு சராசரியாக இதுவரை 26 பேர் போட்டியில் உள்ளனர்.