இந்தியா

சீன எல்லை பகுதிகளில் இரட்டை திமில் ஒட்டகங்களில் ரோந்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரியமோதல் ஏற்பட்டது. அப்போது முதல் லடாக் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. லடாக்கின் கடினமான மலைப் பகுதிகளில் இந்தியவீரர்கள் ரோந்துப் பணி மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்துவந்தது.

இதற்கு தீர்வு காண ராஜஸ்தானை சேர்ந்த ஒட்டகங்கள் லடாக் மலைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அந்த ஒட்டகங்களால் லடாக்கின் கடும் குளிரை தாங்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சீனா, மங்கோலியா, கஜகஸ்தான் நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை திமில் ஒட்டகங்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் சோதனை முயற்சியாக இரட்டை திமில் ஒட்டகங்கள் லடாக் மலைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அவை 170 கிலோ எடையை சுமந்தன. சுமார் 17,000 அடி மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் சென்றன. மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரை சமாளித்தன. சுமார் 2 வாரங்கள் வரை உணவு, குடிநீர் இன்றி சமாளித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு முதல் லடாக் மலைப் பகுதிகளில் இரட்டை திமில் ஒட்டகங்கள் நிரந்தரமாக ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய கர்னல் ரவிகாந்த் சர்மா கூறியதாவது: இரட்டை திமில் ஒட்டகங்களில் ரோந்து செல்லும் இந்திய ராணுவ வீரர்கள்.சீன எல்லையில் உயரமான, கடினமான மலைப்பகுதிகளில் இந்திய வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, ஆயுதங்களை கொண்டு செல்வதில் பல்வேறு சவால்கள் எழுந்தன. தற்போது பாக்ட்ரியா ஒட்டகங்கள் இந்திய ராணுவத்தின் வீரர்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு முறையாக பயிற்சி அளித்து உள்ளோம். அவை ஒழுக்கமுள்ள வீரர்களை போன்று செயல்படுகின்றன. தற்போது சீன எல்லைப் பகுதிகளில் இரட்டை திமில் ஒட்டகங்களில் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கர்னல் ரவிகாந்த் சர்மா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT