மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பையில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் பாபா சித்திக். இவர் சிறுவனாக இருக்கும்போது இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. கடந்த 1977-ம் ஆண்டு மும்பை யில் உள்ள கல்லூரியில் படித்த போது காங்கிரஸின் மாணவர் அமைப்பில் இணைந்தார். கடந்த 1998-ம் ஆண்டில் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி யேற்றார். கடந்த 1993-ம் ஆண்டில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1999-ம் ஆண்டில் பாந்தரா மேற்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்ந் தெடுக்கப்பட்டார். கடந்த 2014 வரை இந்த தொகுதி எம்எம்ஏவாக பதவி வகித்தார். கடந்த 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவின் உணவு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகிய பாபா சித்திக், அஜித் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். அவர் மகாராஷ்டிர வீட்டு வசதி ஆணையத்தின் தலை வராக பதவி வகித்தார். மும்பை நிழல் உலக தாதாக்களுக்கும் பாலிவுட் திரையுலகத்துக்கும் இடையே அவர் பாலமாக செயல் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் மும்பை பாந்தரா கிழக்கு பகுதியில் நேற்று முன் தினம் இரவு பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து மும்பை போலீஸார் கூறியதாவது: பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக், பாந்தரா கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு மகனின் அலுவலகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியே வந்து தனது காரில் ஏறினார். அப்போது 3 நபர்கள், அவரை குறிவைத்து கைத்துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 3 குண்டுகள் பாபா சித்திக்கின் உடலை துளைத்தன. உடனடியாக அவர் லீலாவதி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். வழியிலேயே அவரது உயிர்பிரிந்தது. துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஜிகானா கைத்துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிகளை பாகிஸ் தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு கடத்தி வந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது. "துப்பாக்கி சூட்டில் பாபா சித்திக் உயிரிழந்தது துரதிஷ்டவசமானது. இந்த கொலை தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங், ஹரியானாவை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிவ குமார் என்ற 3-வது நபரை போல ஸார் தேடுகின்றனர். வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மரியாதையுடன் பாபாசித்திக் கின் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.
இதுகுறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், "நடிகர் சல்மான்கான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உடனான தொடர்பு காரணமாக பாபா சித்திக்கை கொலை செய்துள்ளோம். சல்மான் கான், தாவூத் இப்ராகிமுக்கு யார் உதவி செய்தாலும் அவர்களை பழிவாங் குவோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சல்மானின் நிகழ்ச்சிகள் ரத்து: பாபா சித்திக் கொலையை தொடர்ந்து நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நடிகர் சல்மான் தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள், அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையை அச்சுறுத்தும் கூலிப்படை: ஒரு காலத்தில் தாவூத் இப்ராகிம் கும்பல் மும்பையை அச்சுறுத்தி வந்தது. இதேபோல தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கூலிப்படை மும்பையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 1993-ம் ஆண்டு பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டம், தோதாரன்வாலி கிராமத்தில் லாரன்ஸ் பிறந்தார். பின்னர் கல்லூரி படிப்புக்காக பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் குடியேறினார். அப்போதுமுதல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது அவரது கும்பலில் 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்தவர்கள்.
கடந்த 2014-ம் ஆண்டில் ராஜஸ்தான் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு சிறையில் இருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் திஹார் சிறையில் இருந்தும் அவர் மறைமுகமாக உத்தரவுகளை பிறப்பித்து கொலை, ஆள்கடத்தல், போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்கள், மான்களின் பாதுகாவலர்களாக செயல்படுகின்றனர். கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடினார். இதன்காரணமாக பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ், நடிகர் சல்மான் கானை எதிரியாக பாவித்து வருகிறார். சல்மானை கொலை செய்ய லாரன்ஸ் கும்பல் பலமுறை முயற்சி செய்திருக்கிறது.