உத்தரப் பிரதேச மாநிலத்தை தாக்கிய புழுதிப் புயலால் 27 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் லக்னோ உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை புழுதிப் புயல் சுழன்றடித்தது. இதில் பல வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது, மரங்கள் வேரோடு சாய்ந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 27 பேர் பலியாயினர்.
பரூக்காபாதில் 10 பேர், பராபங்கியில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர், லக்னோவில் 3 பேர், சீதாபூரில் 3 பேர், ஹர்டோய், ஜலானில் தலா 2 பேர், பாசியாபாதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை முதல் மணிக்கு 75 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர புழுதிப் புயல் வீசி வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. ஓலை, ஓடு வேய்ந்த வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
புயலில் சிக்கிய அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா நடித்து வரும் என்.எச்.10 திரைப்படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியையும் புழுதிப் புயல் தாக்கியது.
இதுகுறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் அனுஷ்கா சர்மா, “வியாழக்கிழமை மாலை படப்பிடிப்புத் தளத்தை பயங்கர புழுதிப் புயல் தாக்கியது. தூசியும் மணலும் கலந்து அந்தப் பகுதியே புழுதி மண்டலமாகக் காட்சியளித்தது. எங்களை அச்சுறுத்தும் வகையில் காற்று வீசியது. எனினும் படப்பிடிப்பு குழுவினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாங்கள் நலமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.