இந்தியா

ஹரியானாவில் ‘துணை முதல்வர்’ ஆசையுடன் பிரச்சாரம் செய்த லாலுவின் மருமகன் தோற்ற கதை!

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஹரியானாவில் பிஹாரின் ஆர்ஜேடி கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மருமகன் சிரஞ்சீவ் ராவ் தோல்வி அடைந்துள்ளார். இவர் தனது பிரச்சாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, துணை முதல்வராக பதவி ஏற்கப்போவதாக உறுதி அளித்திருந்தார்.

பிஹாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவர் தனது ஆறாவது மகளான அனுஷ்கா யாதவை, ஹரியானாவின் சிரஞ்சீவ் ராவுக்கு மணமுடித்திருந்தார். இவர், ஹரியானா காங்கிரஸின் மூத்த தலைவரான கேப்டன் அஜய்சிங் யாதவின் மகன் ஆவார். கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் சிரஞ்சீவ், பாஜக வேட்பாளர் சுனில் குமார் யாதவை 1,317 வாக்குகள் என்ற மிக குறைவான வித்தியாசத்தில் வென்றிருந்தார்.

இந்நிலையில், சிரஞ்சீவ் மீண்டும் ரிவாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால், நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது துவக்கம் முதலே சிரஞ்சீவ் பின்னடைவை சந்தித்தார். இறுதியில் பாஜக வேட்பாளர் லஷ்மண்சிங் யாதவிடம் தோல்வியுற்றார். இவரது தோல்வியை விட, துணை முதல்வர் பதவியை ரிவாரிக்கு பரிசாக அளிப்பதாக கூறி பிரச்சாரம் செய்திருந்தது பேசுப்பொருளாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில், தன்னை தனிப்பட்ட முறையில் சந்தித்தவர்களிடம் எல்லாம், வெற்றிக்கு பின் ஹரியானாவின் துணை முதல்வராக வரப்போவதாக சிரஞ்சீவ் உறுதி அளித்திருந்தார். ஆனால், சிரஞ்சீவ் உட்பட ஹாியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இவரது தந்தையான கேப்டன் அஜய்சிங் யாதவ், ரிவாரியில் கடந்த 1991 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார். 2014 சட்டப்பேரவை தேர்தலில் கேப்டன் அஜய்சிங் தோல்வி அடைந்தார். தற்போது இவர் காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில ஒபிசி பிரிவின் தலைவராக உள்ளார். 2019 சட்டப்பேரவை தேர்தலில் தனது மகன் சிரஞ்சீவை களம் இறக்கினார்.

இம்முறை சிரஞ்சீவுக்காக, முன்னாள் முதல்வர்களான பூபேந்தர் ஹுட்டா மற்றும் அசோக் கெல்லோட், தீபேந்தர் ஹுட்டா, சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். லாலுவும் அவரது மகனும் பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவும், சிரஞ்சீவிக்காக வாக்கு கேட்டு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தனர்.

உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் சிரஞ்சீவி உறவினர் முறை ஆவார். யாதவர்கள் அதிகம் வசிக்கும் ரிவாரி தொகுதியில், அகிலேஷும் பிரச்சாரம் செய்யத் தயாராக இருந்தார். ஆனால், அவரது சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட காங்கிரஸ் கட்சி ஒதுக்கவில்லை. இதனால், அகிலேஷ் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT