புதுடெல்லி: கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு முதல் கட்டமாக உதவி பொருட்கள் இந்தியாசார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் கடந்த மாத இறுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் அங்கு பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கிழக்குமற்றும் மத்திய நேபாள பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தின் காரணமாக வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு மழையால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு உதவ முதல் கட்டமாக நிவாரண பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது.
மருந்துகள், உணவுப் பொருட்கள், தூங்குவதற்கு வசதி செய்துதரும் நீண்ட பைகள், போர்வைகள், தார்ப்பாய்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும். மொத்தம் 4.2 டன் எடையுள்ள பொருட்களை நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாக இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து நேபாள்கஞ்ச் நகருக்கு சாலை வழியாகமுதல் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி நாராயண் சிங் தலைமையிலான குழு, நேபாள நாட்டின் பாங்கே மாவட்ட தலைமை அதிகாரியான காகேந்திரா பிரசாத் ரிஜாலிடம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியது. காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.