மிசோரம் ஆளுநராக இருந்த கமலா பெனிவாலை பதவி நீக்கம் செய்தது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, “கமலா பெனிவால், ராஜஸ்தான் மாநில அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
குஜராத்தில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த லோகாயுக்தா பதவியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை, அப்போது அந்த மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால்தான் நியமனம் செய்தார். இதனால், அப்போதைய பாஜக மாநில அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இதன் காரணமாகவும், அடிப்படை யற்ற புகார் காரணமாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மிசோரம் ஆளுநர் பதவியிலிருந்து கமலா பெனிவால் நீக்கப்பட்டுள்ளார்.
அவரை பதவியிலிருந்து நீக்கி யது அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது; உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்திய அரசியலில் பகை உணர்வை ஊக்குவிக்கும் வகையில், அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை அமைந்துள் ளது” என்றார்.
“இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பிரிவுத் தலைவருமான அஜய் மக்கன் ட்விட்டர் இணைய தளத்தில் கூறியுள்ளார்.