புதுடெல்லி: உத்தர பிரதேசம், ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராரா கிராமத்தில் கடந்த ஜூலை 2-ம் தேதி சத்ஸங் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலேபாபா, நடத்திய ஆன்மிகக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 112பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.
போலே பாபா குற்றம் செய்திருந்தால் தப்ப முடியாது என உத்தரபிரதேச காவல்துறை கூறியது. இந்நிலையில், தற்போது இவ்வழக்குத் தொடர்பாக 3,200 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் 2 பெண்கள் உட்பட 11பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் போலே பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்தவரான இவர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால்அவர் இவ்வழக்கிலிருந்து தப்ப விடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறும்போது, “போலே பாபாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லாதது ஜனநாயகத்துக்கு எதிரானது. 121 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமான இவரை,யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தப்ப வைக்க முயல்கிறது” என்றார்.