இந்தியா

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத் வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

பரேலி: உத்தர பிரதேசம் பரேலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் கடந்தாண்டு மே மாதம் ஒரு புகார் அளித்தார். அதில் பரேலியில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு படிக்கும்போது ஆனந்த் குமார் என்பவர் அறிமுகமானார். அவரை காதலித்து திருமணம் செய்த பின்புதான், அவர்இந்து அல்ல முஸ்லிம் என்பதும், அவரது உண்மையான பெயர் மொகத் ஆலிம் அகமது என்பதும்தெரியவந்தது என கூறியிருந்தார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஆலிம் அகமது மீது பாலியல் வன்கொடுமை உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பரேலி கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி புகார் கூறிய பெண், தான் ஏற்கெனவே அளித்த சாட்சியம் பொய் என்றும், இந்துத்துவா அமைப்புகள் தனதுபெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததன் பேரில் அந்த புகார் அளிக்கப்பட்டது என கூறினார்.

சாட்சியத்தை ஏற்க மறுப்பு: ஆனால் இந்த சாட்சியத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. குற்றவாளியின் வற்புறுத்தல் காரணமாக அந்தப் பெண் சாட்சியத்தை மாற்றி கூறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதன்பின் நீதிபதி ரவி குமார் திவாகர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

லவ் ஜிகாத்தின் முக்கிய நோக்கம் மக்களை மதமாற்றம் செய்வது. இதன் பின்னணியில் மதவாத அமைப்புகள் உள்ளன. முறைகேடான திருமணங்கள் மூலம் முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிம்களாக ஏமாற்று வழியில் மாற்றப்படுகின்றனர். லவ் ஜிகாத் பின்னணியில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்ணின் கையில் விலையுயர்ந்த ஆன்ட்ராய்டு செல்போன் உள்ளது. இந்த சட்டவிரோத மதமாற்றத்தில் சில பயங்கரவாத தனிநபர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த லவ் ஜிகாத் பின்னணியில் வெளிநாட்டு பணம் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெயரை மாற்றிக் கூறி லவ் ஜிகாத்மோசடியில் ஈடுபட்ட மொகத் ஆலிம் அகமது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ரவி குமார் திவாகர் தனது தீர்ப்பில் கூறினார். இதே நீதிபதிதான் கடந்த 2022-ம் ஆண்டில் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT