மங்களூரில் எபோலாவால் ஒருவர் பலியானதாக, வாட்ஸ் ஆப்-இல் பரவிய வதந்தியால் இந்திய நகரங்களில் எபோலா பீதி ஏற்பட்டது.
"எபோலாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித் என்ற மங்களூரைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர் இன்று பலியானார். இதன் மூலம் கர்நாடகத்தினுள் எபோலா எதிர்ப்பாராத விதமாக நுழைந்துவிட்டது. அனைவரும் தேவையான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்!.
நண்பர்களே, உங்கள் உணவில் அன்றாடம், துளசியை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், எபோலா தாக்குவதிலிருந்து தப்பிக்களாம்" என்பது தான் வாட்ஸ் ஆப்-இல் இந்திய நகரங்கள் முழுவதும் பரவிய வதந்தி.
கடந்த ஞாயிறு முதல் இந்த செய்தி, மங்களூர் எங்கும் பரப்பப்பட்டு தற்போது பல்வேறு பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள மங்களூரைச் சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார், "மங்களூரு மாணவர்கள் மத்தியில், எபோலாவால் எம்.டெக் மாணாவர் ஒருவர் உயிரிழந்ததாக வதந்தி பரவியுள்ளது. இந்த செய்தி முற்றிலுமாக தவறு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலியான மாணவர், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எபோலா தொற்று ஏற்படவில்லை. இது போல அவசர நிலையை ஏற்படுத்திவிடும், அச்சுறுத்தலான தகவல்களை பரப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.