பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சாரதா சிட்பண்ட் நிறுவன வழக்கில் தொடர்புடைய பிஜு ஜனதா தள் எம்.எல்.ஏ. பிரவதா திரிபாதியின் இல்லம் உட்பட 56 இடங்களில் சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இவற்றில் ஒடிஷாவில் 54 இடங்களிலும் மும்பையில் 2 இடங்களிலும் தேடுதல் பணிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
புவனேஸ்வர், பலேஸ்வர் மற்றும் பிரம்மாபூர் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் தேடுதல் பணிகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஜு ஜனதா தள் எம்.எல்.ஏ.வான பிரவதா திரிபாதியின் இல்லம் மற்றும் அலுவலகம், அர்த்தா தத்வா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரின் உறவினர் வீடுகளிலும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தவிர, ஒடிஷா கிரிக்கெட் கழகத்தின் செயலாளர் ஆஷிர்பாத் பெஹ்ரா, ஒடிஷாவின் உள்ளூர் பத்திரிகையின் உரிமையாளர் பிகாஷ் ஸ்வெயின் மற்றும் முன்னாள் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் சம்தித் குந்தியா ஆகியோரது இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக திரிபாதியைத் தொடர்பு கொண்டபோது தன்னுடைய இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். எனினும், அந்த வழக்கில் தனக்குத் தொடர்பு இருப்பதை மறுத்தார்.
மேலும், அந்த நிறுவனம் கூட்டுறவு சங்கமாக இயங்கியபோது அதனுடைய சில கூட்டங்களில் கலந்துகொண்டிருப்பதை வைத்து தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக திரிபாதி தெரிவித்தார்.