அலகாபாத்: ‘‘கலியுகம் வந்துவிட்டதை காட்டுகிறது’’ என்று முதிய தம்பதிகள் ஜீவனாம்ச வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் 75 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட முதிய தம்பதிகள் ஜீவனாம்ச வழக்கை விடாப்பிடியாக நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜீவனாம்சம் கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கணவர் முனேஷ் குமார் குப்தா வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சவுரப் ஷியாம் ஷம்ஷெரி, ‘‘80 வயதுக்குட்பட்ட தம்பதிகள் இப்படி ஜீவனாம்ச வழக்கில் பிடிவாதமாக இருப்பது கலியுகம் வந்துவிட்டதை காட்டுகிறது. இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருவது வருத்தம் தரும் விஷயமாக உள்ளது. அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் முயற்சித்தேன்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது முதிய தம்பதிகள் ஓர் ஒப்பந்தத்துக்கு முன்வருவார்கள் என்று நம்புவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.